இரண்டாவது நாளாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல்: இரண்டாவது நாளாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

by Bella Dalima 24-08-2019 | 6:54 PM
Colombo (News 1st) தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சோதனை நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. 6 தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக இந்திய மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர், இலங்கையை சேர்ந்த 5 பேர் அடங்கலாக 6 பயங்கரவாதிகளே தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. லக்சர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களே தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாக இந்திய மத்திய உளவுத்துறை நேற்றயை தினம் அறிவித்தது. இன்றைய தினமும் கோவையின் பல பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், காவல்துறை ரோந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சுமார் 2,000-இற்கும் மேற்பட்ட பொலிஸார் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பொது இடங்கள் , பஸ் விமான நிலையங்களில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கோவைக்குள் நுழையும் மற்றும் வௌியேறும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்குட்படுத்தப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கோவில் நகர் என அறியப்படும் மதுரையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1200-இற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவிலைச் சூழவுள்ள தங்குமிடங்கள் பரிசோதிக்கப்படுவதுடன், கோவில் CCTV கமராக்களும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்ட எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 20-இற்கும் மேற்பட்ட காவலரண்கள் அமைக்கப்பட்டு சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது. நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் உட்பட பொதுமக்கள் கூடும் பகுதிகளிலும் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் தங்குவதற்கு யாரேனும் வருகை தருவார்களாயின் அவர்கள் தொடர்பிலான முழு விபரங்களும் பொலிஸாருக்கு வழங்கப்பட வேண்டும் என விடுதி உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.