by Staff Writer 20-08-2019 | 9:38 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் அணிக்கான தலைமை பயிற்றுநர் நியமனத்தின் போது, பயிற்றுநரின் எதிர்பார்ப்பிற்கு மேலதிகமான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட கணக்காய்வின் போது இது தொடர்பிலான தகவல்கள் வெளிவந்துள்ளன.
தலைமை பயிற்றுநராக சந்திக்க ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டபோது நிறைவேற்றுக்குழு எவ்வித முறையான அனுமதியையும் வழங்கவில்லை என்பது கணக்காய்வில் தெரியவந்துள்ளது.
அத்தோடு, அவருடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் சட்டப்பிரிவிற்கோ அல்லது வேறு தரப்பிற்கு வழங்கப்பட்டு சட்டப்பூர்வமாகவும் முறையாகவும் ஆராயப்படவில்லை என்பதும் இதன்போது கண்டறியப்பட்டுள்ளது.
தலைமை பயிற்றுநர் மற்றும் கிரிக்கெட் நிறுவனத்திற்கு இடையிலான உடன்படிக்கையின் மூன்றாவது சரத்திற்கு அமைய, விமான பயணங்களுக்கான செலவுகளுக்காக வருடாந்தம் 20,000 அமெரிக்க டொலர் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து 2019 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 30 ஆம் திகதி வரை கிரிக்கெட் நிறுவனம் அவருக்கு செலுத்தியுள்ள தொகை 44,15,901 ரூபாவாகும்.
உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் வருமான வரி நடைமுறைக்கு அமைய, மேலதிக வருமானத்தின் அடிப்படையில் பயிற்றுநரிடமிருந்து 10,59, 810 ரூபாவை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கத் தவறியுள்ளது.
கிரிக்கெட் பயிற்றுநருக்காக மாதாந்த வாடகைக்கு பெற்றுக்கொண்ட வாகனத்திற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மாதாந்தம் 1,30,000 ரூபாவை செலுத்தியுள்ளது.
குறித்த வாகனத்திற்கான எரிபொருள் கட்டணமும் கிரிக்கெட் நிறுவனத்தினால் செலுத்தப்பட்டுள்ளது.
வரியை கணக்கிடும்போது 6,30,000 ரூபா பெறுமதியான, நிதியல்லாத கொடுப்பனவு கவனத்திற்கொள்ளப்படவில்லை என்பதுடன் இதனால் 1,51,200 ரூபா உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் செலுத்துவதற்கு இணக்கம் தெரிவித்த 50,45,901 ரூபாவிற்கான வருமான வரித்தொகை 12,11,016 ரூபாவாகும்.
இந்த தொகை மாத்திரம் அல்லாது, வரியின் மீது செலுத்த வேண்டிய 35.8 வீதத்திற்கான 3,82,439 ரூபாவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு செலுத்தப்படவில்லை என்பது கணக்காய்வில் தெரியவந்துள்ளது.
தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுநருக்காக வரியை செலுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இணக்கம் தெரிவித்ததால், 1,55,37,700 ரூபாவிற்கான அநாவசிய செலவை சுமக்க வேண்டிய நிலை கிரிக்கெட் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் மேம்பாட்டிற்காக செலவிடக்கூடிய நிதியைக் கொண்டு ஒரு ஊழியரின் வரியை செலுத்துவதற்காக உடன்படிக்கை சைச்சாத்திடப்பட்டுள்ளமை தெரிய வருவதாகவும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைமை பயிற்றுநரான சந்திக்க ஹத்துருசிங்கவிற்கு சம்பளத்திற்கு மேலதிகமாக அவர் தயாரிக்கும் தேர்ச்சி அறிக்கைக்காக 36 மாதங்களுக்கு 60,000 அமெரிக்க டொலர் வீதம் 3,60,000 டொலர்களை செலுத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொடுப்பனவு அரையாண்டிற்கு ஒரு முறை வழங்கப்பட வேண்டிய போதிலும், அரையாண்டு ஆரம்பமாவதற்கு முன்னதாகவே செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கான காரணம் கணக்காய்வின் போது தெரியவரவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சந்திக்க ஹத்துருசிங்கவிற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய வரி 28,04,465 ரூபாவாகும்.
இத்தகைய பாரிய மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் இந்த விடயம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லவா?