மக்கள் சக்தியின் மக்கள் மன்ற செயற்றிட்டம் இன்று ஆரம்பம்

by Staff Writer 19-08-2019 | 2:46 PM
Colombo (News 1st) கிராமத்திற்கு கிராமம் - மக்கள் சக்தி தீர்ப்பாயம் இன்று (19) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவன தலைமையக வளாகத்தில் இந்த செயற்றிட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவன தலைமையக வளாகத்தில் சர்வமதத் தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் இன்று முற்பகல் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் உயரதிகாரிகள், நியூஸ்பெஸ்ட் அலுவலக ஊழியர்கள் மற்றும் மக்கள் சக்தி குழுவின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தினூடாக, இலங்கை வரைபடத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள கிராமங்களைப் போலவே, வரைபடத்தில் பெயரிடப்படாத பல கிராமங்களுக்கும் எமது குழுவினர் பயணித்துள்ளனர். கிராமங்களில் காணப்படும் பிரச்சினைகள் வௌிக்கொணரப்படாமல், கிராமத்திற்குள்ளேயே புதைக்கப்படுகின்றமையை எங்களால் அடையாளம் காண முடிந்தது. குரலற்ற மக்களின் பிரச்சினைகளை பொது அரங்கிற்கு கொண்டுவரும் நோக்குடன் கிராமத்திற்கு கிராமம் - மக்கள் சக்தி தீர்ப்பாயம் இன்று முதல் தனது செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ளது. மக்கள் சக்தி திட்டத்தினூடாக, பொதுமக்களுக்காக செயற்படுத்தப்பட்ட செயற்றிட்டங்களினூடாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களும் இதில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டத்தின் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட 8 பிரச்சினைகளுக்கான தீர்வை உடனடியாக செயற்படுத்துவதற்கு மக்களும் பங்களிப்பு செய்யும் வாய்ப்பு இதனூடாக வழங்கப்படவுள்ளது. இதங்காகத் தயாரிக்கப்பட்டுள்ள விசேட விண்ணப்பத்தை பூர்த்திசெய்து மக்கள் சக்தி குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும். பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் மக்கள் சக்தி குழுவினரால் அடையாளம் காணப்பட்டுள்ள பிரச்சினைகளில் 8 பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வை வழங்கக்கூடிய செயற்றிட்டங்களுக்கு கையொப்பமிடவும் மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.