by Staff Writer 19-08-2019 | 9:09 PM
Colombo (News 1st) 1993 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மறைவின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
1994 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் காமினி திசாநாயக்கவின் மறைவினை அடுத்து ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருந்தாலும் அவர் நழுவிச் சென்றார்.
இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியைச் சந்தித்தது.
அதன் பின்னர் 1999 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி உறுதியாகியிருந்த நிலையிலும் தன்னால் போட்டியிட முடியும் எனத் தெரிவித்து போட்டியிட்ட விக்கிரமசிங்க, 7 இலட்சம் வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டார்.
2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொண்ட பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 89 மாத்திரமே.
அதற்கு முன்னர் இருந்த பாராளுமன்ற ஆசனங்கள் 94 இலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி இந்த வீழ்ச்சியை சந்தித்திருந்தது.
கட்சியின் சிரேஷ்டத்துவத்தின் தந்திரோபாய நகர்வினால் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 109 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது.
எனினும் அவர்களால் பாராளுமன்ற பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
ஏனைய பங்காளிக் கட்சிகளுடன் 2 ஆண்டுகள் ஆட்சியமைத்த ஐக்கிய தேசியக் கட்சியின் 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் பாராளுமன்ற ஆசனங்கள் 82 ஆக மட்டுப்படுத்தப்பட்டது.
மீண்டும் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க பாரிய தோல்வியை சந்தித்தார்.
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தாத ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கினார்.
இந்தத் தேர்தலில் சரத் பொன்சேகா தோல்வியை சந்தித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 60 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டதுடன் கட்சியிலிருந்து 10 உறுப்பினர்கள் கட்சி தாவி ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு வௌியேறினர்.
தோல்விக்கே உரித்தான ரணில் விக்கிரமசிங்க 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்ததுடன் அவருடன் கதைத்து பிரதமர் பதவியையும் கேட்டுப் பெற்றுக் கொண்டார்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் கட்டியெழுப்பிய 62 இலட்சம் வாக்குகளை பாதுகாக்கத் தவறிய ரணில் விக்கிரமசிங்க, சில மாதங்களில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அரசாங்கத்தின் பலத்தை நிரூபிக்கத் தவறியிருந்தார்.
ஜனாதிபதியின் ஆதரவு இல்லாவிடின் 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்திருக்கக்கூடிய அந்தஸ்து எதிர்க்கட்சியே.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஏனைய கட்சிகளுடன் இணைந்தும் 32.61 வீத வாக்குகளையே சுவீகரித்துக் கொள்ள முடிந்தது.
ரணில் விக்கிரமசிங்க கட்சியின் தலைமையை ஏற்று 25 வருடங்களில் 3 ஜனாதிபதித் தேர்தல்கள் உட்பட 29 தேர்தல்களில் கட்சி மற்றும் ஆதரவாளர்களின் தலைவிதி இவ்வாறே அமைந்தது.
கட்சி, ஆதரவாளர்கள் இந்த நிலைமையைத் தொடர்ந்தும் எதிர்கொள்ள வேண்டுமா?