ஜனாதிபதி வேட்பாளராக அனுர குமார திசாநாயக்க தெரிவு

ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான கூட்டமைப்பினால் அனுர குமார திசாநாயக்க தெரிவு

by Fazlullah Mubarak 18-08-2019 | 6:03 PM

Colombo (News 1st) மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுர குமார திசாநாயக்க இன்று (18) பிரேரிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு - காலி முகத்திடத்தில் இடம்பெற்ற 'தேசிய மக்கள் சக்தி' மாநாட்டில் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி தமது கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை 20 வருடங்களுக்கு பின்னர் அறிவித்துள்ளது. 1999 ஆம் ஆண்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நந்தன குணதிலக்க அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் தேர்தலில் மூன்றாமிடத்தை பெற்றிருந்தார். 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கும் 2010 ஆம் ஆண்டில் சரத் பொன்சேகாவுக்கும் ஆதரவளித்த மக்கள் விடுதலை முன்னணி 2015 ஆம் ஆண்டில் தமது கட்சி சார்பில் எந்த வேட்பாளரையும் பிரேரிக்கவில்லை. அத்துடன், ஊழலுக்கு எதிரான சித்தாந்தத்தை மக்கள் மயப்படுத்துவதில் முன்னின்று செயற்பட்டது. இதற்கிணங்க, 20 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஜனாதிபதித் தேர்தல் களத்துக்குள் இன்று அனுர குமார திசாநாயக்க பிரவேசித்துள்ளார்.