சுயமாக சிந்திக்கும் எந்தவொரு தமிழனும் கோட்டாபயவிற்கு வாக்களிக்கக் கூடாது: சி.வி.விக்னேஸ்வரன்

by Staff Writer 16-08-2019 | 7:55 PM
Colombo (News 1st) தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் வட மாகாண முதலமைச்சருமாகிய சி.வி.விக்னேஸ்வரன் நியூஸ்ஃபெஸ்ட்டின் கேள்விகளுக்கு பதிலளித்தார். கேள்வி: ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உங்களை தேர்தலில் போட்டியிடுமாறு அழைப்பதாக வௌியான செய்தி உண்மையா? பதில்: அது எப்படி கதை வந்தது என்று தெரியவில்லை. SLFP, SLPP அல்லது UNP அவ்வாறு கேட்கவில்லை. இந்த கதை வந்ததற்கு காரணத்தை சொன்னேன். அதை பிழையாக விளங்கிக்கொண்டுள்ளார்கள். சில காலத்திற்கு முன்னர் தயாசிறி ஜயசேகர விக்னேஸ்வரன் தேவை என்றால் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடலாம் என்று தெரிவித்தார். அதனை சில பத்திரிகைகள் அவர் SLFP செயலாளராக இருப்பதால் தங்கள் சார்பில் விக்னேஸ்வரனை முன்னிறுத்தவுள்ளார்கள் என போட்டிருக்கிறார்கள். இது வீண் கதை. ஆனால், என்னுடைய மக்கள் என்னிடம் கேட்டார்கள், தமிழ் மக்களின் வாக்குகளை எடுத்து உலகிற்குக் காட்ட முடியும் என்று. ஆனால், தேர்தலில் சிங்களவர் ஒருத்தர் தான் வெல்லப்போகின்றார். நாங்கள் தேர்தலில் நிற்பதில் எவ்வித நன்மையும் பெறமுடியாது. இருந்தாலும் மூன்றாம் நபர் ஒருவருக்கு தமிழ் மக்கள் சேர்ந்து வாக்களிப்பதால் எங்களது மனோ நிலையை வெளிக்காட்ட முடியும். அது யாராகவும் இருக்கலாம். கேள்வி: வாக்குகளை சிதறடிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறதே? பதில்: வாக்குகளை சிதறடிப்பதற்கு ஒவ்வொரு கட்சியும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது உண்மை. தமிழர்களை பொறுத்தவரை பல கோரிக்கைகளை முன்வைக்க இருக்கிறோம். எவர் ஒருவர் அந்த கோரிக்கைகள் சரி என்று கூறுகின்றாரோ அவருக்கு ஆதரவைத் தெரிவிக்க முடியும். கேள்வி: பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டுள்ளதை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? பதில்: எனக்கு தெரிந்த வரையில், சுயமாக சிந்திக்கும் எந்த ஒரு தமிழனும் அவருக்கு வாக்களிக்க மாட்டான். வாக்களிக்கக்கூடாது. தமிழ் மக்களை கொன்று குவித்தவர்களில் அவரும் ஒருவர். இறுதி நேரத்தில் ஆயுதங்கள் எல்லாவற்றையும் விட்டு வௌ்ளைக்கொடியுடன் போகும்போது அவர்கள் எல்லோரையும் கொன்று குவிக்குமாறு ஆணை வழங்கப்பட்டது. இந்த ஆணை வேறு எவராலும் வழங்கப்பட்டிருக்க முடியாது. அதற்கு பொறுப்பாக இருந்தவர்தான் செய்திருக்க வேண்டும். இவ்வாறு மக்களை ஜீவகாருண்யமற்ற வகையில் கொன்று குவித்தவருக்கு வாக்களிக்க முடியாது. அதைவிட வௌ்ளை வேன். மஹிந்த ராஜபக்ஸ பிழை என்றுதான் நான் கருதுகின்றேன். தமிழ் மக்கள் எந்தக் காலத்திலும் அவருக்கு வாக்களிக்கக்கூடாது.