by Staff Writer 10-08-2019 | 6:00 PM
Colombo (News 1st) உற்சவ கால பாதுகாப்பு நடவடிக்கைகளில் தலையிட முடியாது என நல்லூர் பெருங்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் தனிப்பட்ட நிறுவனங்கள், அரச அமைப்புக்கள், உள்ளூராட்சி மன்றங்கள், வணக்கஸ்தலங்கள் தலையிட முடியாது என்பதைப் போன்றே நல்லூர் கோவில் நிர்வாகமும் தலையிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள புராதன ஆலயங்கள் அனைத்திலும் பாதுகாப்பு சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. திருப்பதி பெருமாள் ஆலயம் தொடக்கம் மதுரை மீனாட்சி வரை பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்துதான் அருள் பாலிப்பதாக நல்லூர் ஆலய நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் வணக்கஸ்தலங்களில் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் நிரந்தரமாகவே தேவைப்படுவதாகவும், உற்சவ கால பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தடுக்க நினைப்பது சரியானதா எனவும் நல்லூர் ஆலய நிர்வாகம் கேள்வி எழுப்பியுள்ளது.
பாதுகாப்பின் பொருட்டு சோதனை நடவடிக்கைகளுக்கான நேரம் தேவைப்படுவதால், பக்தர்கள் முற்கூட்டியே வருகைதரும் பட்சத்தில் தேவையற்ற அசெளகரியங்களைத் தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.