by Staff Writer 06-08-2019 | 5:59 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் ஒருவரை சமூக வலைத்தளத்தினூடாக அச்சுறுத்தி பணம் பெற முயன்ற சந்தேகநபர் இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களின் ஊடாக பொய்யான செய்திகளைப் பரப்பி, அச்சுறுத்தல் விடுத்து பண மோசடிகளை மேற்கொண்டு வந்த நோர்வேயில் வசிக்கும் இலங்கையரான சேதுரூபன் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம். சிவபாலசுப்ரமணியம் உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேற்றைய தினம் சந்தேகநபர் தரப்பு சட்டத்தரணிகளால் நகர்த்தல் பத்திரத்தின் ஊடாக வழக்குத் தொடரப்பட்டு சந்தேகநபரான சேதுரூபன் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு சரீரப் பிணையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.