முஸ்லிம் எம்பிக்கள் மீண்டும் பதவிப் பிரமாணம்

பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் எம்பிக்கள் சிலர் மீண்டும் பதவிப் பிரமாணம்

by Staff Writer 29-07-2019 | 9:01 PM
Colombo (News 1st) பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுள்ளனர். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மீண்டும் பதவிப் பிரமாணம் செய்துள்ளார். இதேவேளை, கைத்தொழில் மற்றும் வணிக விவகாரம், நீண்டகால இடம்பெயர்வுக்குள்ளான மக்களை மீள் குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில்பயிற்சி மற்றும் திறன்விருத்தி அமைச்சராக ரிஷாட் பதியுதீன் மீண்டும் பதவியேற்றுள்ளார். அத்துடன், விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சராக அமீர் அலி பதவிப்பிரமாணம் செய்துள்ளார். துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதி அமைச்சராக அப்துல்லா மஹ்ருவ் பதவிப்பிரமாணம் செய்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, கைத்தொழில் மற்றும் வணிக விவகாரம் நீண்டகால இடம்பெயர்வுக்குள்ளான மக்களை மீள் குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில்பயிற்சி மற்றும் திறன்விருத்தி இராஜாங்க அமைச்சராக புத்திக பத்திரண, ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார். முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகளைத் துறந்ததை அடுத்து, புத்திக்க பத்திரண குறித்த அமைச்சுக்களுக்கான பதில் அமைச்சராக பதவிவகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹாரிஸ், அலிசாஹிர் மௌலானா, பைசல் காசிம் ஆகியோர் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்கவில்லை.