ப்ளூஃபீல்ட் தோட்ட முகாமையாளர் மீது தாக்குதல்: சந்தேகநபர்கள் 17 பேருக்கு பிணை

by Staff Writer 10-07-2019 | 8:26 PM
Colombo (News 1st) கொத்மலை - ப்ளூஃபீல்ட் தனியார் தோட்ட முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 17 பேரும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு எதிர்வரும் 7 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ப்ளூஃபீல்ட் தனியார் தோட்டத்தொழிற்சாலைக்கு முன்பாக மக்கள் கடந்த வியாழக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் ஊழியர் சேமலாப நிதி ஆகியன தமது கணக்கில் வைப்பிலிடப்படவில்லை என தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தொழிற்சாலைக் கட்டடம் மற்றும் பங்களாக்களின் கண்ணாடிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 17 பேரும் கடந்த சனிக்கிழமை முதல் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர்.