போதைப்பொருளுக்கு அடிமையானோருக்கான வேலைத்திட்டம்

போதைப்பொருளுக்கு அடிமையானோருக்கு புனர்வாழ்வளிக்கும் வேலைத்திட்டம்: ஜனாதிபதி ஆலோசனை

by Staff Writer 10-07-2019 | 5:10 PM
Colombo (News 1st) போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள 18 வயதிற்கும் கீழ்பட்டோருக்கு புனர்வாழ்வளிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். மாகாண மட்டத்தில் இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்துமாறு போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான அதிகார சபைக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். நாடளாவிய ரீதியில் 18 வயதிற்கும் கீழ்பட்ட, போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் 115,000 பேர் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணி, பொலிஸார் மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் அதிகார சபை ஆகியன ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது கடந்த 6 மாதங்களில் மாத்திரம் 40,864 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்புகளின் போது 3500 கிலோகிராமிற்கும் அதிக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.