MCC உடன்படிக்கை தொடர்பில் ஜனநாயக ரீதியில் செயற்படாவிடின் பின் விளைவுகளை அனுபவிக்க நேரிடும்: அமெரிக்க தூதரக அதிகாரி

by Bella Dalima 06-07-2019 | 6:02 PM
Colombo (News 1st) Millennium Challenge Corporation எனப்படும் MCC உடன்படிக்கை தொடர்பில் ஜனநாயக ரீதியில் செயற்படாவிடின், பின் விளைவுகளை அனுபவிக்க நேரிடும் என அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த உடன்படிக்கை தொடர்பில் டெய்லி மிரர் பத்திரிகை வினவியமைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். டெய்லி மிரர் பத்திரிகை இன்று (06) வெளியிட்டுள்ள செய்திக்கு அமைய, MCC ஊடாக கிடைக்கவுள்ள 480 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்காது அல்லது தற்காலிகமாக இரத்து செய்யப்படும் என்பதே அமெரிக்க தூதரக அதிகாரி சுட்டிக்காட்டியுள்ள பின் விளைவாகும். Millennium Challenge Corporation எனப்படும் MCC உடன்படிக்கை ஊடாக, காணி உரிமை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் தனியார் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள அரச காணிகளுக்கான வாடகையைப் பெற்று அரசாங்கத்தின் வருமானத்தை உயர்த்தும் இயலுமை காணப்படுவதாக தூதரக அதிகாரி பத்திரிகைக்கு குறிப்பிட்டுள்ளார். குறித்த உடன்படிக்கையின் ஊடாக இலங்கையின் காணிகளை கையகப்படுத்துவதற்கு அமெரிக்கா தயாராவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்க தூதரக அதிகாரி பதிலளித்துள்ளார். இந்த உடன்படிக்கையின் ஊடாக அமெரிக்கா காணிகளை கையகப்படுத்தாது என அவர் கூறியுள்ளார். காணி தொடர்பில் ஆராயும் மற்றும் நிர்வகிக்கும் இயலுமை இலங்கை அரசாங்கத்திற்குள்ளது எனவும் டெய்லி மிரர் பத்திரிகைக்கு அமெரிக்க தூதரக அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, MCC என்பது இலங்கை மக்களுக்கு அமெரிக்க மக்கள் வழங்கும் பரிசு என அமெரிக்க தூதரகம் தனது ட்விட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளது. அது தொடர்பில் போலியான தகவல்கள் தற்போது பரப்பப்படுவதாகவும் தூதரகத்தின் ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.   இலங்கையின் காணிகள் கையகப்படுத்தப்பட மாட்டாது என அமெரிக்க தூதரக அதிகாரி குறிப்பிட்ட போதிலும், யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியிலுள்ள காணி மற்றும் துறைமுகத்தை அமெரிக்காவின் செனட் சபை அதிகாரிகள் இருவர் நேற்று (05) கண்காணித்துள்ளனர். இந்திய நிதியுதவியின் கீழ், பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்புலத்தில், இவர்கள் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். பலாலி விமான நிலையத்தில் இருந்து அமெரிக்க செனட் சபை அதிகாரிகள் கண்காணித்த காணி, சுமார் 4 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. கொழும்பிலிருந்து கிடைத்த தொலைபேசி அழைப்பிற்கு அமைய இந்த விஜயத்திற்கான அனுமதியை வழங்கியதாக, நியூஸ்ஃபெஸ்ட் இது தொடர்பில் வினவிய போது யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுப்ரமணியம் முரளிதரன் கூறினார். எனினும், தமக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய நபரை வெளிப்படுத்த அவர் மறுத்துவிட்டார். இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியிடம் வினவியபோது, தூதரகங்களின் ஆலோசனைக்கு அமைய அதிகாரிகள் செயற்பட முடியாது என அவர் கூறினார். இராஜதந்திர செயற்பாட்டிற்கு அமைய செயற்படுவதாயின், வெளிவிவகார அமைச்சு மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆகியவற்றை தெளிவூட்டி அனுமதி பெற வேண்டும் எனவும் செயலாளர் தெரிவித்தார். இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்னவிடம் வினவிய போது, அமெரிக்க பிரதிநிதிகளின் இந்த விஜயம் தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என அவர் கூறினார். இது தொடர்பில் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனிடமும் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களின் யாழ். விஜயம் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என அவர் பதிலளித்தார். அவ்வாறு எனின், யாழ்ப்பாணத்திலுள்ள காணிகளை கண்காணிப்பதற்கு அமெரிக்க பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கியது யார்?