by Staff Writer 01-07-2019 | 5:58 PM
Colombo (News 1st) பிரமுகர் பாதுகாப்புப் பிரிவுடன் இணைந்த வகையில் சேவையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைத் தாக்கியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த சிசிர குமார அபேசேகரவின் மகன் இஷார சத்துரங்க அபேசேகர எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (முதலாம் திகதி) சிலாபம் பிரதம நீதவான் ரக்கித அபேசிங்க முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு 8.45 மணியளவில் சிலாபம், சேதவத்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் நீடித்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த சிசிர குமார அபேசேகரவின் மகன் பிரமுகர் பாதுகாப்புப் பிரிவுடன் இணைந்த வகையில் சேவையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளை பொல்லால் தாக்கியுள்ளார்.
இன்று காலை சந்தேகநபர் சிலாபம் பொலிஸில் சரணடைந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சிலாபம் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.