இந்திய குடியுரிமை வழங்குமாறு இலங்கையர்கள் கோரிக்கை

இந்திய குடியுரிமை வழங்குமாறு இலங்கை அகதிகள் கோரிக்கை

by Staff Writer 26-06-2019 | 9:35 PM
Colombo (News 1st) தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் இலங்கை அகதிகள் தமக்கு இந்திய குடியுரிமை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் ஏழு முகாம்களில் வசிக்கும் இலங்கை அகதிகள், தாங்கள் இந்தியாவிலேயே வசிக்க விரும்புவதால் இந்திய குடியுரிமை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களைக் கையளித்துள்ளனர். குல்லூர்சந்தை, செவ்வலூர், கண்டியாபுரம், அனுப்பன்குளம், மொட்டைமலை, மல்லாங்கிணறு, ஆனைக்குட்டம் ஆகிய 7 இடங்களில் வசிக்கும் இலங்கை அகதிகளே இவ்வாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர். இந்த முகாம்களில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்னதாக வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அகதிகளாக தமிழகம் சென்றவர்களே இந்திய குடியுரிமையைக் கோரியுள்ளனர்.