மகேஷ் சேனாநாயக்க, ரிஷாட் பதியுதீனுக்கு அழைப்பு

மகேஷ் சேனாநாயக்க, ரிஷாட் பதியுதீனுக்கு பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு

by Staff Writer 25-06-2019 | 7:15 PM
Colombo (News 1st) இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர், கைத்தொழில் அபிவிருத்தி திணைக்களத்தின் பொது முகாமையாளர் ஆகியோரும் நாளை (26) தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க அழைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி குறிப்பிட்டார். ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நாளை (26) பிற்பகல் 2 மணியளவில் பாராளுமன்ற கட்டட தொகுதியில் கூடவுள்ளது. இந்த விசாரணைகள் தொடர்பில் இறுதி அறிக்கையை மாத்திரம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி சிசிர மெண்டிஸ், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கியுள்ளனர். இதேவேளை, முன்னாள் மாகாண ஆளுநர்களான M.L.A.M. ஹிஸ்புல்லா, அசாத் சாலி உள்ளிட்ட பலர் ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.