கஷோக்கி படுகொலையில் சவுதி இளவரசருக்கு தொடர்புள்ளது

கஷோக்கி படுகொலையில் சவுதி இளவரசருக்கு நேரடி தொடர்புள்ளது: ஐ.நா. விசேட கண்காணிப்பு அதிகாரி

by Bella Dalima 20-06-2019 | 4:50 PM
செய்தியாளர் ஜமால் கஷோக்கி படுகொலையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான மரண தண்டனை நிறைவேற்றங்கள் தொடர்பான விசேட கண்காணிப்பு அதிகாரி Agnes Callamard குறிப்பிட்டுள்ளார். கஷோக்கியின் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரஸை அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் நெதர்லாந்தின் ஜெனீவா நகரில் விடயங்களைத் தௌிவுபடுத்தியுள்ளார். துருக்கியிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் செய்தியாளர் ஜமால் கஷோக்கி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான தனது விசாரணையில், அந்த கொலையுடன் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பு உள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் தனக்கு கிடைத்துள்ளதாகவும் Agnes Callamard கூறியுள்ளார். கஷோக்கி படுகொலை தொடர்பாக சவுதி அரேபிய அதிகாரிகள் சிலர் மீது சர்வதேச நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்ததால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. படுகொலையில் சவுதி இளவரசருக்கு நேரடித் தொடர்பு உள்ளதற்கான ஆதாரம் உள்ள நிலையில், அவர் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதும், வெளிநாடுகளில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கவதும் தான் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும் என Agnes Callamard வலியுறுத்தியுள்ளார். சவுதி அரேபியாவை சேர்ந்த செய்தியாளர் ஜமால் கஷோக்கி, சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து தப்பி அமெரிக்காவில் வசித்து வந்தார். அங்கு வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் கட்டுரைகள் எழுதி வந்த அவர், சவுதி அரசையும், அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த சூழலில், சில ஆவணங்களைப் பெறுவதற்காக துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி அரேபிய துணைத் தூதரகத்திற்கு கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி சென்ற கஷோக்கி, அங்கு படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை குறித்து, சட்டத்திற்குப் புறம்பான, விசாரணையில்லாத மரணதண்டனை நிறைவேற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களை கண்காணித்து பதிவு செய்வதற்காக ஐ.நா.வால் நியமிக்கப்பட்டுள்ள Agnes Callamard தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில், தற்போது அவர் தெரிவித்துள்ள இந்தக் கருத்து ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்தாவிட்டாலும், அந்த அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருக்கும் அவர் இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.