by Staff Writer 19-06-2019 | 4:25 PM
IS பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்த குற்றச்சாட்டில் புழல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூவரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களை தவிர கோவையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமும் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த மூன்று சந்தேகநபர்கள் தொடர்பில் போத்தனூர் பொலிஸாரினால் முதலாவது தகவல் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
கோவையிலுள்ள கோவில்கள், தேவாலயங்கள்,மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி பொதுமக்களை கொலை செய்வற்கு திட்டமிட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்களின் செயல்களும் மிக தீவிரமாக மத அடிப்படைவாதிகள் என்பதை காட்டுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.
கோவையில நிலவி வரும் மத ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு திட்டமிட்டுள்ளமையும் தெரியவந்துள்ளதுடன், குறித்த மூவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போத்தனூர் பொலிஸாரின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொஹமட் ஹூசைன், ஷாஜஹான், ஷேக் சபியுல்லா ஆகிய மூவர் கடந்த 15 ஆம் திகதி கோவையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டிருந்தனர்.