வாகனக் கொள்வனவு உள்ளடங்கிய 56,545 மில்லியன் ரூபா பெறுமதியான குறைநிரப்புப் பிரேரணை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

by Staff Writer 18-06-2019 | 9:17 PM
Colombo (News 1st) பாராளுமன்ற சபைக்கு கையளிக்கப்படவிருந்த குறைநிரப்புப் பிரேரணையை வாபஸ் பெறுவதாக, சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். குறைநிரப்புப் பிரேரணையில் காணப்படும் சில தவறுகள் காரணமாக அதனை தாம் மீளப் பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 56,545 மில்லியன் ரூபா பெறுமதியான குறைநிரப்புப் பிரேரணை பாராளுமன்றத்தில் இன்று (18ஆம் திகதி) சமர்ப்பிக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்புப் பிரேரணை மீதான விவாதத்தின்போது அதில் பல தவறுகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மேலும் சில அமைச்சுகளுக்கான வாகனக் கொள்வனவு உள்ளிட்ட சில விடயங்களுக்காக இந்த குறைநிரப்புப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களை கொள்வனவு செய்வதற்கும் இந்த குறைநிரப்புப் பிரேரணையில் ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை திருத்துவது உள்ளிட்ட மேலும் சில செலவுகளுக்காக 56,000 மில்லியனுக்கும் அதிக நிதியை செலவிடுவதற்கு, அரசாங்கம் பாராளுமன்றத்தில் இன்று அனுமதி கோரியுள்ளது. நான் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டபோது, எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இருந்த வாகனங்களை முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் எடுத்துச்சென்றார். அப்போதே எமக்கொரு வாகனத்தை அலுவலகத்திற்காக வழங்கினர். அதனாலேயே இந்த பிரச்சினை தொடர்பில் நான் சிந்திக்கின்றேன். அதனால் எதிர்க்கட்சித் தலைவருக்கு வாகனமொன்றை வழங்குவதில் பிரச்சினையுள்ளதா? எனது அனைத்து வாகனங்களையும் கொண்டு சென்றதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ கேள்வியெழுப்பியுள்ளார். நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வாகனமொன்று இருக்க வேண்டும். விரைவில் தேர்தலும் வரவுள்ளதாக சபை முதல்வர் லக்‌ஷ்மன் கிரியெல்ல பதிலளித்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு இருந்த இரண்டு வாகனங்களையும் எடுத்தனர். அதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.