தொடரும் வறட்சி; வட மாகாணத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

by Staff Writer 17-06-2019 | 8:04 PM
Colombo (News 1st) வட மாகாணத்தில் நிலவும் வறட்சி காரணமாக, 1,90,244 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. யாழ். மாவட்டத்தில் சுமார் 21000 குடும்பங்களும் மன்னாரில் சுமார் 18000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள அதேநேரம், கிழக்கு மாகாணத்தில் சுமார் 36000 குடும்பங்களைச் சேர்ந்த 1,52,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 4,47164 வரை அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஆனையறைவு கடல் நீரேரியின் நீர்மட்டம் வெகுவாகக் குறைவடைந்துள்ளது. இதனால், இந்த கடல் நீரேரியில் மீன்பிடியில் ஈடுபட்ட தட்டுவங்கொட்டி கிராமத்தை சேர்ந்த 100க்கும் அதிக குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளன. மட்டக்களப்பு - கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட முறுத்தாணைக் கிராமத்தில் 113 குடும்பங்கள் குடிநீரைப் பெறுவதில் சிரமப்படுகின்றனர். முறுத்தாணை கிராமத்தில் காணப்படும் 4 கிணறுகளிலும் நீர் வற்றியுள்ளதுடன், அருகிலுள்ள ஆற்று நீரைப் பருகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்தக் கிராமத்தில் அரச சார்பற்ற நிறுவனத்தினால் வழங்கப்பட்ட குடிநீர்த் திட்டம் செயலிழந்து பல வருடங்களாகின்றன. மட்டக்களப்பு கிரான் கமநல சேவைப் பிரிவுக்குப்பட்ட மாவட்டுவான் கண்டத்தில் சுமார் 250 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் தொடர் வறட்சியால் மாவட்டுவான் கண்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 250 ஏக்கர் நெற்செய்கையும் முற்றுமுழுதாக அழிவடைந்துள்ளன. இதேவேளை, மட்டக்களப்பு - வவுணதீவு கொத்தியாவளை மற்றும் இலுப்பயடிச்சேனை பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்று வீசியதில் குறித்த இரு கிராம சேவகர் பிரிவுகளிலுமுள்ள பத்துக்கு மேற்பட்ட குடிசை வீடுகளின் கூரைகள் அள்ளுண்டு சென்றுள்ளன. அத்துடன், சுமார் 10 நிரந்தர வீடுகளின் மேல் மரக்கிளைகள் முறிந்து வீழ்ந்ததில் சிறிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.