ஸ்தம்பித்துள்ள சுற்றுலாத்துறையால் பாதிக்கப்பட்டுள்ள துறைசார் மக்கள்

by Bella Dalima 04-06-2019 | 9:29 PM
Colombo (News 1st)  IS பயங்கரவாதிகளை ஒரு மாதத்திற்குள் ஒழித்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும், நாட்டின் மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தமது நாளாந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். வறட்சியைப் போக்குவதற்கான நிவாரணங்கள் எவையும் மக்களுக்கு வழங்கப்படவில்லை. தாக்குதல் காரணமாகவே இப்பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. குண்டு துளைக்காத வாகனக் கொள்வனவின் போதும், விசேட ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் போதும் அமைச்சரவைப் பத்திரங்களை சமர்ப்பிக்கும் போதும் எவ்வித சிக்கன நடவடிக்கைகளையும் காண முடிவதில்லை. இந்நிலையில், சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல துறைகளைச் சார்ந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த பின்னடைவிற்கு தீர்வாக அரசாங்கம் மானியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியதாக நிதி அமைச்சரும் மத்திய வங்கியும் அவ்வப்போது தகவல் வெளியிடுவதைக் காண முடிந்தது. இதன் கீழ் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், சுற்றுலாத்துறைக்காக அனைத்து வங்கிகள் ஊடாகவும் பெறப்பட்டுள்ள கடனுக்காக 2020 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரை தாமதக் கடன் நிவாரணக் காலம் அறிவிக்கப்பட்டது. வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களிடம் பெறப்பட்ட கடனுக்காகவும் 2019 ஆம் ஆண்டு மே 21 ஆம் திகதியிலிருந்து 2020 மார்ச் 31 ஆம் திகதி வரை தாமதக் கடன் நிவாரணக் காலம் வழங்கப்படவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்தது. எனினும், சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் இதற்கு மாறுபட்ட கருத்தையே வெளியிடுகின்றனர். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியிடம் இது தொடர்பில் வினவியபோது, தேவையான வழிகாட்டல்களை ஏற்கனவே வங்கிகளுக்கு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனத் தலைவர்களை அழைத்து ஆலோசனைகளை வழங்கியதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார். சர்வதேச நாடுகள் விதித்துள்ள பயணத் தடையை நீக்கிக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு செல்வதைத் தவிர்க்குமாறு பல நாடுகள் விதித்த தடை இன்னமும் தளர்த்தப்படவில்லை. இலங்கைக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இந்தியா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா, நெதர்லாந்து, கனடா, ஜப்பான், இத்தாலி, ஸ்வீடன், சிங்கப்பூர், டென்மார்க், தென் கொரியா, ஆஸ்திரியா, செக் குடியரசு, பெல்ஜியம், ஸ்லோவாக்கியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் தமது பிரஜைகளை அத்தியாவசியத் தேவைகள் தவிர்ந்து இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு ஏற்கனவே அறிவித்துள்ளன. இலங்கைக்கு குறிப்பிடத்தக்களவு சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வருகை தருகின்றனர். எனினும், ரஷ்யா தமது பிரஜைகளை இலங்கைக்கு பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.