பாகிஸ்தானை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்

உலகக்கிண்ணம்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 7 விக்கெட்களால் வெற்றி

by Bella Dalima 31-05-2019 | 7:28 PM
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 7 விக்கெட்களால் வெற்றியீட்டியது. பாகிஸ்தான் நிர்ணயித்த 106 ஓடட்டங்கள் இலக்கை மேற்கிந்தியத் தீவுகள் அணி 13.4 ஓவர்களில் கடந்தது. Shai Hope 11 ஓட்டங்களுடனும் Darren Bravo ஓட்டமின்றியும் ஆட்டமிழந்த போதிலும் Chris Gayle 50 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை இலகுவாக்கினார். Nicholas Pooran 34 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று வெற்றியை உறுதி செய்தார். நொட்டிங்ஹாமில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணித்தலைவர் Jason Holder களத்தடுப்பை தெரிவுசெய்தார். அவரது தீர்மானம் சரியென நிரூபிக்கும் வண்ணம் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் மிக அபாரமாக விளையாடினர். ஆரம்பம் முதலே பாகிஸ்தான் அணியின் விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன. Fakhar Zaman , Babar Azam ஆகியோர் பெற்ற 22 ஓட்டங்களே அணி சார்பில் பெறப்பட்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும். பாகிஸ்தான் அணி 100 ஓட்டங்களையாவது எட்டுமா எனும் கேள்விக்குறி எழுந்திருந்த போது, களமிறங்கிய Wahab Riaz 18 ஓட்டங்களைப் பெற்று ஆறுதலளித்தார். பாகிஸ்தான் அணி 21.5 ஓவர்களில் 105 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. பந்துவீச்சில் Oshane Thomas 5.4 ஓவர்களில் 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை கைப்பற்றினார். அணித்தலைவர் Jason Holder 3 விக்கெட்களையும், Andre Russell 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.