2100ஆம் ஆண்டிற்குள் கடல் நீர்மட்டம் 25 செமீ உயரும்

2100 ஆம் ஆண்டிற்குள் கடல் நீர் மட்டம் 25 சென்டி மீட்டர்கள் உயரும் என ஆய்வில் தகவல்

by Bella Dalima 28-05-2019 | 4:43 PM
உலக வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் தொடர்ந்து உருகி வருகின்றன. இதனால், பெருகி வரும் கடல் நீர் மட்டம் எதிர்வரும் 2100 ஆம் ஆண்டிற்குள் சுமார் 25 சென்டி மீட்டர்கள் உயரும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் வடதுருவப் பகுதிக்கு அருகிலுள்ள கிரீன்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் தென்துருவப் பகுதியான அண்டார்டிக்காவிலும் அதிகளவிலான பனிப்பாறைகள் காணப்படுகின்றன. ஆனால், அதிகரித்து வரும் உலக வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் உருகும் வேகமும் அதிகரித்து வருகிறது. இதனால், கடல்நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. இது குறித்து, அமெரிக்காவின் நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் ஆய்வாளர்கள் கூறியிருப்பதாவது:
உலகில் பல்வேறு இடங்களில், அந்தந்த இடங்களின் சூழ்நிலைக்கு ஏற்ற சீரான வேகத்தில் பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இதைக் கண்காணித்து வரும் பல்வேறு ஆராய்ச்சி மையங்களிலிருந்து 200-க்கும் அதிகமான கணினி பனிப்பாறை மாதிரிகள் ஒன்றிணைக்கப்பட்டன. இந்தக் கணினி மாதிரிகள் மூலம் உலகம் முழுவதுமுள்ள 2 இலட்சத்திற்கும் அதிகமான பனிப்பாறைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வந்தன. இந்த ஆய்வின் மூலம், பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், 2100-ஆம் ஆண்டிற்குள் கடல் நீர் மட்டம் சுமார் 25.4 சென்டி மீட்டர்கள் உயரும். கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிக்காவில் உள்ள பனிப்பாறைகள் உருகுவது மட்டுமே கடல் நீர் மட்ட உயர்விற்கு காரணம் என பலர் நினைத்து வருகின்றனர். ஆனால், மற்ற நாடுகளில் உள்ள சிறு பனிப்பாறைகளும் கடல் நீர் மட்ட உயர்வில் முக்கியப் பங்காற்றி வருகின்றன.
உதாரணமாக, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள 25,000-க்கும் அதிகமான சிறு பனிப்பாறைகள், 2100-ஆம் ஆண்டிற்குள் 30 முதல் 50 சதவீத அளவு உருகிவிடும்; உலக அளவில் நோக்கும்போது, சராசரியாக 18 முதல் 36 சதவீதப் பனிப்பாறைகள் உருகிவிடும் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.