வெல்லம்பிட்டிய ஊழியர்கள் குறித்த விசாரணை TIDயிடம்

வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை ஊழியர்கள் குறித்த விசாரணை TIDயிடம் ஒப்படைப்பு

by Staff Writer 26-05-2019 | 7:31 AM
Colombo (News 1st) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை ஊழியர்கள் 8 பேர் தொடர்பிலான விசாரணைகள் பொலிஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதற்காக பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த சந்தேகநபர்களை நாளை (27ஆம் திகதி) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 8 சந்தேகநபர்கள் அடங்கலாக 9 பேரை பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் கடந்த 6ஆம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தது. பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் சந்தேகநபர் ஒருவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதலுக்காக குண்டுகள் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெல்லம்பிட்டி செப்புத்தொழிற்சாலையின் ஊழியர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். இதேவேளை, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்புடன் தொடர்புகளைப் பேணியதான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற அலுவலக ஊழியர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கண்டியை சேர்ந்த 45 வயதான பாராளுமன்ற அலுவலக ஊழியர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பயங்கரவாத விசாரணை பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற அலுவலக ஊழியரை 3 மாதங்களுக்கு தடுத்துவைத்து விசாரணை செய்ய பாதுகாப்பு அமைச்சு பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.