கன்னியா வெந்நீரூற்று காணி உரிமம் தொடர்பில் மீண்டும் சர்ச்சை

by Staff Writer 24-05-2019 | 8:24 PM
Colombo (News 1st) திருகோணமலை - கன்னியா வெந்நீரூற்று அமைந்துள்ள காணியின் உரிமம் தொடர்பில் மீண்டும் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. இராவணன் தனது தாயாரின் இறுதிக்கிரியைக்காக வாள் கொண்டு குத்திய ஏழு இடங்களில் இந்த வெந்நீரூற்று உருவானது என்பது ஐதீகம். பல காலமாக சுற்றுலாத்தளமாகக் காணப்படும் இந்தப் பகுதி பல வருடங்களுக்கு முன்னர் இருந்தே திருகோணமலை பட்டணமும் சூழலும் நகர சபையினால் நிர்வகிக்கப்பட்டது. எனினும், 2015ஆம் ஆண்டில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலூடாக இந்தப் பகுதி தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. எனினும், இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததுடன், நகர சபைக்கு மீண்டும் வழங்குமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும் பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அந்தக் கோரிக்கைகள் கருத்திற்கொள்ளப்படாத நிலையில், அங்குள்ள பௌத்த விகாரைப் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்கும் எதிர்ப்பு ஏற்பட்டதுடன், அந்தப் பகுதியில் பழமையான ஆலயம் காணப்பட்டதாகவும் ஒருசாரார் குறிப்பிட்டனர். இந்த நிலையில், மாவட்ட அரசாங்க அதிபர் N.A.A. புஷ்பகுமார் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் இன்று அந்தப் பகுதிக்குச் சென்றிருந்தனர். இதன்போது, வில்கம் விகாரையின் விகாராதிபதிக்கும் காணிக்கு உரிமம் கோருபவர்களில் ஒருவரான கோகிலரமணிக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இந்தப் பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். அதுவரை தொல்லியல் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகளைத் தொடருமாறு மாவட்ட அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.