by Bella Dalima 24-05-2019 | 7:28 PM
இந்திய மக்களவை தேர்தலில் பல முக்கிய தலைவர்களும் பிரமுகர்களும் தோல்வியை சந்தித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஸ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் தோல்வியைத் தழுவியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் தோல்வியடைந்துள்ளார்.
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை விட சுமார் 3 இலட்சம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் கனிமொழி வெற்றிபெற்றுள்ளார்.
மத்திய சென்னையில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் வெற்றியீட்டியுள்ளார்.
அரக்கோணம் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் 3 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளார்.
சிவகங்கை தொகுதியில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளார்.
சிதம்பரம் தனித்தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மிகப்பெரிய இழுபறிக்குப் பின்னர் வெற்றியீட்டியுள்ளார்.
தேனி மாவட்டத்தில் தமிழகத்தின் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் இருந்து அதிமுக, பாஜக கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் ரவீந்திரநாத் என்பது குறிப்பிடத்தக்கது.
சீமானின் நாம் தமிழர் கட்சி முதன்முறையாக மிகப்பெரிய சாதனையை இந்த தேர்தலில் பெற்றுள்ளது. தேர்தலில் தீர்மானிக்கும் சக்திகள் என பேசப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம் கட்சிகளை விட நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளை இம்முறை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பீகாரில் சசாராம் தொகுதியில் முன்னாள் சபாநாயகர் மீராகுமார் தோல்வி கண்டுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 4 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்துள்ளார்.
கர்நாடகா மாநில முதல்வர் குராமசாமியின் தந்தையான, முன்னாள் பிரதமர் தேவகவுடா - தும்கூரு தொகுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார்.
டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் டெல்லி - வடகிழக்கு பகுதியில் போட்டியிட்டு படுதோல்லி அடைந்துள்ளார்.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், பாராளுமன்ற உறுப்பினருமான கவிதா கல்வகுன்ட்லா, தெலுங்கானா - நிஜாமாபாத் தொகுதியில் தோல்வியடைந்துள்ளார்.
உத்திரபிரதேசம் லக்னோவில் போட்டியிட்ட அமைச்சர் ராஜ்நாத் சிங் வெற்றி பெற்றுள்ளார்.
இந்திரா காந்தியின் மருமகளான மேனகா காந்தி, உத்திரபிரதேசம் சுல்தான்பூரில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியில் போட்டியிட்ட, மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி வெற்றி பெற்றுள்ளார்.
அமைச்சர் நிதின் கட்காரி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியை சந்தித்துள்ளார்.
பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி, கேரள மாநிலம், திருச்சூர் தொகுதியில் தோல்வியடைந்துள்ளார்.
பாஜக சார்பில் ராம்பூரில் போட்டியிட்ட அத்தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நடிகை ஜெயப்பிரதா தேல்வியுற்றுள்ளார்.
கிழக்கு டெல்லியில் பாஜக தரப்பில் போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் வெற்றி பெற்றுள்ளார். குத்துச்சண்டை வீரரும், காங்கிரஸ் வேட்பாளருமான விஜேந்தர் சிங், தெற்கு டெல்லி தொகுதியில் தோல்வியுற்றுள்ளார்.