கல்வி மறுசீரமைப்பிற்காக சிங்கப்பூரின் ஒத்துழைப்பை பெறவுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

by Staff Writer 22-05-2019 | 8:45 PM
Colombo (News 1st) தேசிய விஞ்ஞான போதனா டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்த 2,365 பேருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. கல்வி மறுசீரமைப்பிற்காக சிங்கப்பூரிடம் இருந்து ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளத் தயாராவதாக இதன்போது பிரதமர் கூறினார். பிரதமர் தெரிவித்ததாவது,
எமது பாடசாலைகளை சிங்கள பாடசாலை, தமிழ் பாடசாலை, பௌத்த பாடசாலை, இந்து, கத்தோலிக்க, முஸ்லிம் பாடசாலை என்று தொடர்ந்தும் கொண்டு செல்வதா, இல்லாவிட்டால் பொதுவான பாடசாலை கட்டமைப்பிற்கு செல்வதா என்ற பிரச்சினையை நாம் தீர்க்க வேண்டும். மீண்டும் இவ்வாறான கருத்துக்கள் ஏற்படாத வகையில் நாம் நிலைமையை உருவாக்க வேண்டும். பாடசாலைகளை மறுசீரமைப்பதன் மூலமே நிலைமையை பாதுகாக்க முடியும். டி.எஸ். சேனாநாயக்க எதிர்காலத்தின் நன்மையைக் கருதி, அன்று திட்டமொன்றை உருவாக்கினார். எனினும், நாம் அதிலிருந்து விடுபட்டோம். அவரது திட்டத்தை வேறு நாடொன்று செயற்படுத்தியது. அதுவே சிங்கப்பூர். நான் சிங்கப்பூருடன் பேசியுள்ளேன். எமது கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை அங்கு அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது. முதலாவது குழுவை நான் சிங்கப்பூருக்கு அனுப்பவுள்ளேன். சிங்கப்பூரின் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் இங்கு வந்துள்ளார். எந்தவொரு உதவியையும் வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக அவர் கூறினார். ஆகவே, புதிய திட்டமொன்றுக்கு செல்வதற்கு நாம் தயாராவோம்.