Millennium Challenge Corporation உடன்படிக்கையில் கைச்சாத்திட எதிர்பார்ப்பு: அமெரிக்கா - இலங்கை கூட்டறிக்கை

by Staff Writer 18-05-2019 | 8:30 PM
Colombo (News 1st) Millennium Challenge Corporation உடன்படிக்கையில் கைச்சாத்திட எதிர்பார்ப்பு: அமெரிக்க - இலங்கை கூட்டறிக்கை அமெரிக்காவின் வொஷிங்டனில் அண்மையில் நடைபெற்ற ஐக்கிய அமெரிக்க - இலங்கை கூட்டு கலந்துரையாடல் தொடர்பான கூட்டறிக்கையொன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 16 ஆம் திகதி நடைபெற்ற மூன்றாவது ஐக்கிய அமெரிக்க - இலங்கை கூட்டு கலந்துரையாடலில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கலந்துகொண்டிருந்தார். Millennium Challenge Corporation நிறுவனம் வழங்கிய 480 மில்லியன் அமெரிக்க டொலருக்கு அனுமதி வழங்கப்பட்டமையை, இரண்டு அரசாங்கங்களும் இதன்போது வரவேற்றதாக, ஐக்கிய அமெரிக்கா மற்றும் இலங்கை அரசாங்கங்களின் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு, ஐக்கிய அமெரிக்காவின் காங்கிரஸ் மற்றும் இலங்கையின் அமைச்சரவை ஆகியவற்றின் அனுமதியை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு, சமுத்திர மற்றும் எல்லை பாதுகாப்பு ஒத்துழைப்பு செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கு இலங்கையுடன் அமெரிக்கா முன்நிற்கும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச சட்டம் மற்றும் உடன்படிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, இந்திய மற்றும் பசுபிக் கடற்பிராந்தியங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இரண்டு அரசுகளும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இதன்போது இணக்கம் எட்டப்பட்டுள்ளது. அதன் கீழ் கடல் மற்றும் வான் மார்க்கமாக பயணித்தல், இடையூறுகள் இன்றி வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான சுதந்திரத்தை உறுதிபடுத்தல், சுதந்திர மற்றும் திறந்த இந்து - பசுபிக் வலயத்திற்கான ஐக்கிய அமெரிக்காவின் உபாய மார்க்கம் என்பன முக்கிய முயற்சியாக இதன்போது இனங்காணப்பட்டதாக இரு நாடுகளினதும் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.