வெசாக் பூரணை தினம்: ஜனாதிபதி, பிரதமரின் வாழ்த்து

வெசாக் பெளர்ணமி தினம்: ஜனாதிபதி, பிரதமரின் வாழ்த்துச் செய்தி

by Staff Writer 18-05-2019 | 4:16 PM
Colombo (News 1st) புத்தபிரானின் ஜனனம் ஞானோதயம் மற்றும் பரிநிர்வாணம் ஆகிய வாழ்க்கையின் மூன்று கட்டங்களை நினைவுகூர்ந்து பூஜிக்கும் வெசாக் பெளர்ணமி தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. குரோதத்தினால் குரோதம் தணியாது, அன்பினாலேயே குரோதம் தணியும் எனும் நிலையான உண்மையை நோக்கி மனங்களை செலுத்த வேண்டிய காலமிது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதிகாரத்திற்காக அடுத்தவரை அழிப்பதற்குப் பதிலாக அளவற்ற அமைதியைக் கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புதல் பற்றிய புத்தபிரானின் போதனைகளை இன்று மீட்டிப்பார்க்க வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஆயுத பலம் என்பது தற்காலிகமானது என்பதை புரிந்துகொண்டவர்களாகவே இருக்கிறோம் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த வெசாக் பூரணை தினத்தில், கருணை உள்ளத்தோடு அதர்மத்தை தர்மத்தால் அழிக்கும் மார்க்கத்தில் பிரவேசித்து நாட்டில் நிலையான சுபீட்சத்தை ஏற்படுத்த உறுதி பூண வேண்டும் எனவும் ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார். இன, மத ரீதியாகப் பிரிந்து நின்று அழிவினை எதிர்கொள்வதற்குப் பதிலாக, ஒவ்வொருவரினதும் கலாசாரப் பல்வகைமைக்கு மதிப்பளித்து மனிதர்கள் என்ற வகையில், சமாதானத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் தேவையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது வெசாக் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் நோக்குடன் அதிகளவில் மக்கள் ஒன்றுகூடும் பூஜைகளை விட்டுத் தவிர்ந்திருக்க வேண்டிய சூழலில், புத்த மதத்தின் உயரிய பெறுமானங்களின் அடிப்படையில் கொள்கைப் பூஜைகளில் ஈடுபடுவதன் ஊடாக சமூக மறுமலர்ச்சியை எதிர்பார்த்து ஒற்றுமையாக செயற்படுவது மிகவும் முக்கியமானதாகும் என பிரதமர் கூறியுள்ளார். புத்த மதத்தின் அடிப்படை அம்சங்களான அன்பு, பரிவிரக்கம், கருணை, மன அமைதி ஆகிய நான்கு பிரம்மங்களை பின்பற்றுவதன் மூலம் ஆன்மீக அமைதியையும், பொதுவாக சமூகத்தில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பகைமையைக் கொண்டு பகைமையை முறியடிக்க முடியாது என போதித்த புத்த பெருமான், அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பு காட்டுவதன் மூலமே மீட்சியைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெளிவாக உபதேசித்துள்ளார். சகிப்புத்தன்மை இல்லாமை , சமத்துவமின்மை என்பன அதிகரித்து வரும் இந்த சந்தர்ப்பத்தில் அஹிம்சை மற்றும் பிறருக்கு உதவுதல் பற்றிய புத்தபெருமானின் போதனைகள் முன்னெப்பொழுதையும் விட முக்கியத்துவம் பெறுவதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தனது வெசாக் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அனைவரதும் நலனை முன்னிட்டு சமாதானமும் கண்ணியமும் நிறைந்த உலகைக் கட்டியெழுப்புவதற்கான பொறுப்புணர்வை புதுப்பித்துக்கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.