by Staff Writer 09-05-2019 | 8:25 PM
Colombo (News 1st) அவிசாவளை - புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தின் 12 ஆசிரியர்களுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் பாடசாலைக்கு முன்பாக அமைதியான முறையில் பெற்றோர்களினால் முன்னெடுக்கப்பட்டது.
புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தில் 806 மாணவர்கள் கல்வி பயில்வதுடன், 57 ஆசிரியர்கள் கடமையாற்ற வேண்டிய நிலையில், 40 ஆசிரியர்களுடனேயே பாடசாலை இயங்கி வந்தது.
இந்நிலையில், 12 ஆசிரியர்களின் இடமாற்றம் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை பாதிப்பதாக பெற்றோர் கவலை வௌியிட்டனர்.
புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர், நேற்று முன்தினம் தன்னார்வமாக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது குறித்த 12 ஆசியர்களுக்கும் பெற்றோருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.
இதனையடுத்து, ஆசிரியர்கள் மேல் மாகாண ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடியதை அடுத்து 12 ஆசிரியர்களுக்கும் கொழும்பிலுள்ள வேறு பாடசாலைகளுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.