லாகூர் சூபி மசூதி அருகே தற்கொலை குண்டுத்தாக்குதல்

லாகூர் சூபி மசூதி அருகே தற்கொலைக் குண்டுத்தாக்குதல்: 9 பேர் பலி, 25 பேர் படுகாயம்

by Bella Dalima 08-05-2019 | 4:13 PM
பாகிஸ்தான் - லாகூரில் உள்ள சூபி மசூதி அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பொலிஸார் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர். லாகூரின் கிழக்கில் உலகப் புகழ்பெற்ற டேட்டா தர்பார் மசூதி அமைந்துள்ளது. மிகப்பழமைவாய்ந்த இந்த மசூதியில் பெண்களும் தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். டேட்டா தர்பார் மசூதியில் இரண்டாம் நாள் ரமழான் தொழுகை இன்று காலை நடந்தது. இதன்போது வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்புகளையும் மீறி காலை 8.45 மணியளவில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. சக்திவாய்ந்த குண்டு வெடிப்பில் 5 பொலிஸார் உள்ளிட்ட 9 பேர் பலியானார்கள். சுமார் 25 பேர் படுகாயங்களுக்கு உள்ளானார்கள். அவர்களில் 4 பொலிஸார் உள்ளிட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. மசூதிக்குள் பெண்கள் நுழையும் பகுதியில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் வாகனங்களை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இதுவொரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் என தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.