by Staff Writer 06-05-2019 | 7:29 PM
Colombo (News 1st) இந்திய மக்களவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன.
இன்றைய தினம் 7 மாநிலங்களை சேர்ந்த 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதனடிப்படையில், இன்று மாலையுடன் பீஹாரில் 44.8 வீத வாக்குகளும் ஜம்மு காஷ்மீரில் 15.34 வீத வாக்குகளும் மத்திய பிரதேஷில் 54.17 வீத வாக்குகளும் ராஜஸ்தானில் 50.39 வீத வாக்குகளும் உத்தர பிரதேசத்தில் 44.89 வீத வாக்குகளும் மேற்கு வங்கத்தில் 62.84 வீத வாக்குகளும் ஜார்க்கண்ட்டில் 58.63 வீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
இந்திய மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருவதுடன், இதுவரை 5 கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன.
முதலாம் கட்டத்தில் 69.50 வீத வாக்குகளும் இரண்டாம் கட்டத்தில் 69.44 வீத வாக்குகளும் மூன்றாம் கட்டத்தில் 68.40 வீத வாக்குகளும் நான்காம் கட்டத்தில் 65.51 வீத வாக்குகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று இடம்பெற்ற 5 ஆம் கட்ட வாக்குப்பதிவுடன் ராஜஸ்தான், காஷ்மீர் மாநிலங்களில் தேர்தல் நிறைவடைந்துள்ளன.
அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கும், பா.ஜ.க. வேட்பாளரும் மத்திய அமைச்சருமான ஸ்மிரிதி இரானிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தேர்தலை தொடர்ந்து எதிர்வரும் 12ஆம் திகதி 59 தொகுதிகளுக்கு 6 ஆவது கட்டமாகவும் 19 ஆம் திகதி 59 தொகுதிகளுக்கு 7 ஆவது கட்டமாகவும் தேர்தல் நடைபெறவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.