A கிரிக்கெட் அணியின் பயிற்றுநர் பதவி நீக்கம்

இலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்

by Staff Writer 27-04-2019 | 9:38 PM
Colombo (News 1st) இலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவிஷ்க குணவர்தன அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு இலங்கை வளர்முக அணியின் பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவிஷ்கவிற்கு பதிலாக இலங்கை A அணியின் தலைமைப் பயிற்றுநராக திலான் சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். அவிஷ்க குணவர்தனவை A அணியின் பிரதான பயிற்றுநர் பொறுப்பிலிருந்து நீக்கியமைக்கான காரணத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிடவில்லை. கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை அணியை விடவும் அதிசிறந்த ஆற்றல்களை ​இலங்கை A அணி வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன், அந்த இரண்டு வருடங்களில் இலங்கை A அணி எந்தவொரு தொடர்களிலும் தோல்வியடையவில்லை என்பதும் சிறப்பம்சமாகும். கடந்த இரண்டு வருடங்களில் 20-க்கும் மேற்பட்ட இளம் வீரர்கள் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்த அவிஷ்க குணவர்தன வழிசமைத்துள்ளார். தனஞ்சய டி சில்வா, அவிஷ்க பெர்னாண்டோ, தசுன் சானக்க, கமிந்து மென்டிஸ், அஞ்சலோ பெரேரா, விஷ்வ பெர்னாண்டோ, ஹசித்த பெர்னாண்டோ உள்ளிட்ட வீரர்கள் அவிஷ்க குணவர்தனவின் பயிற்றுவிப்பில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர். அவிஷ்க குணவர்தன இலங்கை A அணியின் பயிற்றுநராக செயற்பட்டமைக்கு வழங்கப்பட்ட ஊதியத் தொகையை விட 5 மடங்கு அதிகமான தொகை திலான் சமரவீரவுக்கு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.