மோடி தொடர்பான இணையத்தொடரை நிறுத்துமாறு உத்தரவு

நரேந்திர மோடி தொடர்பான இணையத் தொடரை நிறுத்துமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

by Bella Dalima 20-04-2019 | 5:39 PM
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பில் ஒளிபரப்பப்படும் இணையத் தொடரை நிறுத்துமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நரேந்திர மோடியின் வாழ்க்கை தொடர்பான திரைப்படத்தை தேர்தல் காலத்தில் வௌியிட கடந்த 10 ஆம் திகதி தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதற்கமைய, 'மோடி - சாதாரண மனிதனின் வாழ்க்கை' என பெயரிடப்பட்டுள்ள இணையத் தொடரையும் நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பதிவாகியுள்ள தரவுகள் மற்றும் இணையத் தொடர் தொடர்பான ஆவணங்களுக்கிணங்க, தற்போதைய மக்களவை தேர்தலில் வேட்பாளராகவுள்ள நரேந்திர மோடி குறித்தான தொடரைக் காட்சிப்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணையம் தெரிவித்துள்ளது. நரேந்திர மோடியின் வாழ்க்கை தொடர்பில் விவேக் ஒப்ராயின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மக்களவை தேர்தலை இலக்கு வைத்து எடுக்கப்பட்டதெனவும் தேர்தல் ஆதாயத்திற்காக பல காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில், 21 ஆம் திகதி வௌியாகவிருந்த திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் இந்த திரைப்படத்தை பார்வையிட்டிருந்தது. தேர்தல் ஆணையம் விதித்த தடையுத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.