by Staff Writer 20-04-2019 | 8:39 PM
Colombo (News 1st) குமண தேசிய சரணாலயத்தில் சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை இன்று இடம்பெற்றது.
சம்பவம் இடம்பெற்ற சரணாலயப் பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கு இன்றும் அனுமதிக்கப்படவில்லை.
கடந்த 18 ஆம் திகதி குமண தேசிய சரணாலயத்தில் வீதி செப்பனிடும் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவரை சிறுத்தை தாக்கியது.
இந்த நிலையில், தாக்குதலுக்கு இலக்கான நபரைத் தேடிச்சென்ற குழுவினரில் ஒருவரும் சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
தாக்குதலுக்குள்ளாகிய நபர் அம்பாறை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அதனையடுத்து, சரணாலயத்தின் குறித்த வலயத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்து.
எனினும், சரணாலயத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்கு இது போதுமானதா?
இவ்வாறு காட்டு விலங்குகளினால் மக்கள் தாக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவல்ல.
பல சந்தர்ப்பங்களில் மலையக மக்கள் உள்ளிட்ட பலரும் சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
இவ்வாறான விடயங்கள் இடம்பெறுகின்றபோது, அவை பேசுபொருளாக மாறுகின்றனவே தவிர, பின்னர் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் மறந்துவிடுகின்றனர்.