by Staff Writer 18-04-2019 | 7:51 PM
Colombo (News 1st) விசேட தேவையுடையவர்கள் நிறுவனங்களுக்குள் பிரவேசிப்பதற்கு போதிய வசதிகள் வழங்கப்படாததால், அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், உடனடியாக அவர்களுக்கான வசதிகளைப் பெற்றுக்கொடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சமூக நலன்புரி அமைச்சு உள்ளிட்ட 8 அரச நிறுவனங்களுக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.
விசேட தேவையுடையவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு 2006 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு அமைய செயற்படுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசேட தேவையுடையவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காத நிறுவனங்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்து, தண்டனை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
சமூக சேவைகள் அமைச்சு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, மேல் மாகாணம் மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சு,கல்வி அமைச்சு, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு, நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு, சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகிய அமைச்சுகளுக்கே உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கலாநிதி அஜித் பெரேராவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த அடிப்படை உரிமை மனு பிரசன்ன ஜயவர்தன, முர்து பெர்னாண்டோ மற்றும் விஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்களால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுதாரருக்கு 50,000 ரூபா வழக்கின் செலவுத் தொகையை செலுத்துமாறும் இதன்போது உயர் நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.