by Staff Writer 08-04-2019 | 5:01 PM
Colombo (News 1st) போதைப்பொருள் மற்றும் ஆட்கடத்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்கு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
நாட்டிற்கு வருகைதந்துள்ள இந்திய பாதுகாப்பு செயலாளர் சஞ்ஜய் மித்ராவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்று (8ஆம் திகதி) முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின்போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பிராந்தியத்தின் பாதுகாப்பிற்காக, போதைப்பொருள் மற்றும் ஆட்கடத்தல் ஆகியவற்றை கட்டுப்படுத்தும்போது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் ஒத்துழைப்பிற்கு அமைய இணக்கப்பாட்டுடன் பணியாற்றுவது குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கை பாதுகாப்புப் பிரிவினருக்கு இந்திய அரசினால் வழங்கப்படும் பயிற்சிகள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதி நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இந்த பயிற்சிகளை மேலும் விரிவுபடுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய பாதுகாப்பு செயலாளர் சஞ்ஜய் மித்ராவிடம் கோரிக்கை விடுத்ததாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.