திரிபோலிக்கு பாதுகாப்பு வழங்குமாறு வலியுறுத்தல்

திரிபோலிக்கு பாதுகாப்பு வழங்குமாறு லிபிய பிரதமர் வலியுறுத்தல்

by Staff Writer 07-04-2019 | 2:19 PM
Colombo (News 1st) வட ஆபிரிக்க நாடான லிபியத் தலைநகர் திரிபோலிக்கு (Tripoli) பாதுகாப்பு வழங்குமாறு ஐ.நா.வின் அனுசரணையைப் பெற்ற அந்நாட்டு பிரதமர் பயஸ் அல் செராஜ் (Fayez al-Serraj) வலியுறுத்தியுள்ளார். லிபியாவின் கிழக்குப் பிராந்தியத்தைத் தளமாகக் கொண்ட ஆயுதக்குழுக்கள் தலைநகர் திரிபோலியின் புறநகர் பகுதிகளில் படையெடுத்துள்ளதுடன், சர்வதேச விமான நிலையத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், ஜெனரல் கலிபா ஹப்தர் (Khalifa Haftar) புரட்சிக்குழுவொன்றை உருவாக்குவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், அவருடைய புரட்சிப்படைகள் பலமான எதிர் நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் எனவும் பயஸ் அல் செராஜ் கூறியுள்ளார். ஐ.நாவின் ஆதரவுடனான சர்வதேச அங்கீகாரம் பெற்ற லிபிய அரசாங்கம் திரிபோலியைத் தளமாகக் கொண்டு இயங்கி வருகின்ற நிலையில், அவ் அரசாங்கத்தை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் குறித்த ஆயுதப்படைகள் முயற்சித்துவருகின்றன. திரிபோலியின் மேற்கு மற்றும் தெற்கு நகரங்களிலிருந்து, ஆயுதக்குழுக்கள் பாரிய தாக்குதல்களை மேற்கொண்டுள்ள போதிலும், அரச ஆதரவுப்படைகளால் அவர்கள் தடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.