கல்விப் பணிப்பாளர் நியமனம்: இடைக்காலத்தடை நீடிப்பு

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

by Staff Writer 03-04-2019 | 6:26 PM
Colombo (News 1st) கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக M.T.A. நிசாம், மாகாண ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லாவினால் நியமிக்கப்பட்டமையை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் இன்று இந்த இடைக்காலத் தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக ஏற்கனவே கடமையாற்றிய M.A.M. மன்சூர் என்பவர் தொடர்ந்தும் கல்விப் பணிப்பாளராக செயற்பட முடியும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மாகாண கல்விப் பணிப்பாளராக பணியாற்றிய தன்னை ஆளுநர் இடமாற்றியமையால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து M.A.M. மன்சூர் எழுத்தாணை மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், ஆளுநரின் தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்து ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இந்த எழுத்தணை மனு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டத்தரணி மன்றில் ஆஜராகியிருந்தார். குறித்த எழுத்தானை மனு மீதான ஆட்சேபனையை சமர்ப்பிப்பதற்கு அரச தரப்பு சட்டதரணியால் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. இதேவேளை, மனுதாரர் சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி இடைக்கால உத்தரவை நீடித்து உத்தரவிடுமாறு கோரியுள்ளார். இருதரப்பு வாதங்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் எழுத்தாணை மனு மீதான இடைக்காலத் தடை உத்தரவை நீடித்து உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, மே மாதம் 20 ஆம் திகதி ஆட்சேபனை மனுவை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.