by Staff Writer 03-04-2019 | 7:16 PM
Colombo (News 1st) உலகக் கிண்ணத் தொடருக்கான குழாத்தை தெரிவு செய்வதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடத்தும் மாகாண கிரிக்கெட் தொடர் நாளை (04) ஆரம்பமாகவுள்ளது.
உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மே 29 ஆம் திகதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆரம்பமாகவுள்ளது.
இதற்கான இலங்கை குழாத்தை தெரிவு செய்வதற்காக மாகாண கிரிக்கெட் தொடரை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடத்துகின்றது.
நாளை ஆரம்பமாகும் இந்தத் தொடர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை நீடிக்கவுள்ளது.
தொடரில் கொழும்பு, கண்டி, தம்புளை, காலி ஆகிய நான்கு அணிகள் மோதவுள்ளன.
லீக் சுற்றில் சகல அணிகளும் ஒன்றை ஒன்று எதிர்த்தாடுவதுடன், புள்ளிகள் பிரகாரம் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளன.
உலகக் கிண்ணத் தொடரில் பெரும்பாலான போட்டிகள் பகலில் நடைபெறவுள்ளதால் இந்தத் தொடரின் சகல போட்டிகளையும் பகல் ஆட்டங்களாக நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
தம்புளை அணியின் தலைவராக அஞ்சலோ மெத்யூஸூம், கொழும்பு அணியின் தலைவராக தினேஷ் சந்திமாலும் செயற்படவுள்ளனர்.
திமுத் கருணாரத்ன கண்டி அணியையும், லஹிரு திரிமான்ன காலி அணியையும் வழிநடத்தவுள்ளனர்.