by Staff Writer 27-03-2019 | 7:24 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் அப்பதவியில் நீடிக்கும் வரை அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தைக் குறிப்பிட்டு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு வீ. ஆனந்தசங்கரி பகிரங்கக் கடிதமொன்றை எழுதியுள்ளார்.
2010 ஆம் ஆண்டில் வேலைவெட்டி இல்லாத இளைஞர்களே ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள் எனவும் இராணுவத்தை விட அதிகளவு பொதுமக்களை விடுதலைப் புலிகள் கொன்றார்கள் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருந்ததாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஆகவே, விடுதலைப் புலிகள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோணத்தில் அந்த கருத்து அமைந்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரனை வெல்ல வைத்ததன் மூலம் விடுதலைப் புலிகள் பொதுமக்களை கொன்றார்கள் என்ற கருத்திற்கு அங்கீகாரம் கொடுத்ததாகவும் வீ. ஆனந்தசங்கரி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் வரப்போகின்றது என்பதால், எம். ஏ. சுமந்திரன் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியினர் பாராளுமன்றத்தில் வீரவசனம் பேசத் தொடங்கியுள்ளதாகவும் அவரது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நீதிமன்ற விசாரணையின் போது எந்த தரப்பிற்காக முன்னிற்கப் போகின்றீர்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் தனது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.