கழக மட்ட சுப்பர் லீக்: பெயர்ப்பட்டியல் வௌியீடு 

கழக மட்ட சுப்பர் லீக்கில் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வீரர்கள் உலகக்கிண்ணத் தொடரில் இடம்பெறுவர்

by Staff Writer 21-03-2019 | 10:32 PM
Colombo (News 1st) கழக மட்ட சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் போட்டியிடும் மாகாண அணிகள் மற்றும் அணித்தலைவர்களின் பெயர்ப்பட்டியல் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள கழக மட்ட சுப்பர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டித் தொடரில் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வீரர்களை உள்ளடக்கி எதிர்வரும் உலகக்கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாத்தை தெரிவு செய்ய இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் நான்கு அணிகள் பங்கேற்பதுடன் தினேஷ் சந்திமால், அஞ்சலோ மெத்யூஸ், லசித் மாலிங்க, திமுத் கருணாரத்ன ஆகியோர் அணித்தலைவர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். நான்கு அணிகளும் லீக் சுற்றில் ஒன்றை ஒன்று எதிர்த்தாடவுள்ளன. அதன் பிறகு புள்ளிகள் பிரகாரம் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதுவதுடன், ஏனைய இரண்டு அணிகளும் மூன்றாம், நான்காம் இடங்களுக்காக போட்டியிடவுள்ளன. இந்த சகல போட்டிகளையும் பகல் ஆட்டமாக நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பெரும்பாலான போட்டிகள் பகலில் நடைபெறவுள்ளமையே அதற்குக் காரணம். போட்டித்தொடரில் பங்குபற்றும் ஓர் அணிக்கான குழாத்தில் 15 வீரர்கள் வீதம் இடம்பெறுவதுடன், மேலதிகமாக 7 பேர் தெரிவு செய்யப்பட்டு தயார்நிலை வீரர்களாக வைக்கப்படவுள்ளனர்.