அர்ஜூன மகேந்திரனை சிங்கப்பூர் நாடு கடத்தாதது ஏன்?

அர்ஜூன மகேந்திரனை நாடு கடத்த முடியாமைக்கு காரணம் என்ன: சிங்கப்பூர் ஊடகங்கள் கேள்வி

by Staff Writer 20-03-2019 | 8:44 PM
Colombo (News 1st) மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, தற்போது சிங்கப்பூரிலுள்ளதாக சந்தேகிக்கப்படும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்த முடியாமற்போயுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி அதிருப்தி தெரிவித்தார். இது குறித்து சிங்கப்பூர் ஊடகங்கள் அந்நாட்டு அரசாங்கத்திடம் வினவியுள்ளன. குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள ஒருவரை நாடு கடத்துவதற்கு சிங்கப்பூர் அரசாங்கம் அக்கறை செலுத்துவது இல்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. எனினும், சிங்கப்பூர் அரசாங்கம் இந்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் நாடு கடத்துவதற்கு தேவையான தகவல்களை வழங்க இலங்கை அரசாங்கத்தினால் முடியாமற்போயுள்ளதாகவும் AFP செய்தி சேவை செய்தி வௌியிட்டுள்ளது. அர்ஜூன மகேந்திரனை மீண்டும் கையளிக்குமாறு விடுக்கும் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு சிங்கப்பூர் சட்டத்திற்கு ஏற்ப தேவைப்படும் தகவல்களை இலங்கை அரசாங்கம் இதுவரையில் வழங்கவில்லை என அந்நாட்டு அரச அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி AFP செய்தி வௌியிட்டுள்ளது. அவ்வாறு அவரை கையளித்தால், இலங்கை மக்கள் சிங்கப்பூர் அரசாங்கத்தை பாராட்டுவார்கள் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அயல் நாடொன்றுக்கு உதவி தேவைப்படும் பட்சத்தில், அதனை நிறைவேற்றாவிட்டால் சிங்கப்பூரின் தந்தை எனப்படும் லீக் குவான் யூவின் கொள்கைக்கு எதிரான செயற்பாடு அது எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு இடையில் நாடு கடத்துவது தொடர்பிலான போதுமான சட்டங்கள் காணப்படுகின்றன. லண்டன் ஸ்கீம் கொள்கைக்கு ஏற்ப, இரண்டு வருடத்திற்கும் அதிக சிறைத்தண்டனை வழங்க முடியுமான குற்றமொன்றை ஒருவர் இழைத்திருந்தால், அவரை நாடு கடத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கையை சிங்கப்பூர் உரிய முறையில் கவனம் செலுத்தவில்லை என்பதுடன், முறிகள் மோசடி தொடர்பிலான தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ளும் செயற்பாடுகளும் தொடர்ந்து பிற்போடப்படுகின்றன. இதேவேளை, தடயவியல் கணக்காய்வை மேற்கொள்வதற்காக சர்வதேச நிபுணர்களைத் தெரிவு செய்யும் திட்டம் தொடர்பிலான அறிக்கையை அமைச்சரவைக்கு மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. முறிகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை வௌியாகி 15 மாதங்கள் கடந்துள்ள போதிலும், தடயவியல் கணக்காய்வை மேற்கொள்வதற்கான எவ்வித செயற்பாடும் ஆரம்பிக்கப்படவில்லை. 6 தடயவியல் கணக்காய்வுகளை மேற்கொள்வதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், அதில் நான்கு கணக்காய்வுகளுக்கான அனுமதியை வழங்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. 5 ஆவது கணக்காய்வுக்கான கடிதம் விரைவில் அனுப்பப்படும் என்பதுடன், ஆறாவது தடயவியல் கணக்காய்வுக்கான கடிதம் தொடர்ந்தும் தாமதமடைகின்றது. ஆறாவது தடயவியல் கணக்காய்விற்காக மீண்டும் ஆரம்பத்தில் இருந்து செயற்பாடுகள் இடம்பெறுவதாக உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.