by Bella Dalima 19-02-2019 | 4:38 PM
துருவ் விக்ரம் நடிப்பில் ‘வர்மா’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகியிருக்கும் நிலையில், சுமார் 7 வருடங்களுக்கு பிறகு பிரபலம் ஒருவர் இந்த படத்தில் மீண்டும் இணையவுள்ளார்.
தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை விக்ரம் மகன் துருவ்வை நாயகனாக அறிமுகப்படுத்தி ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இயக்கினார்.
வர்மா படப்பிடிப்பு முடிந்து வௌியீட்டிற்குத் தயாரான நிலையில், படம் கைவிடப்படுவதாக படக்குழு அறிவித்தது. துருவ்வை கதாநாயகனாக வைத்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தி படத்தை வருகிற ஜூன் மாதத்தில் வௌியிடப்போவதாக படக்குழு தெரிவித்திருந்தது.
இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. அர்ஜுன் ரெட்டியின் அசல் கதையில் பாலா சில மாற்றங்கள் செய்ததாகவும், அதை தயாரிப்பு நிறுவனம் ஏற்காமல் முழுப்படத்தையும் கைவிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
புதிய வர்மா படத்தில் துருவ் ஜோடியாக நடிக்க வளர்ந்து வரும் பாலிவுட் நடிகை பனிதா சந்து ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தை இயக்கிய சந்தீப் வங்காவிடம் துணை இயக்குநராக பணியாற்றிய கிரிசய்யா இந்த படத்தை இயக்கவிருக்கிறார்.
இந்த நிலையில், பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் வர்மா படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
7ஆம் அறிவு படத்திற்கு பிறகு சுமார் 7 வருடங்களின் பின்னர் ரவி கே.சந்திரன் ஒப்பந்தமாகியுள்ள தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.