by Staff Writer 13-02-2019 | 4:49 PM
Colombo (News 1st) மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் தொடர்பான அமெரிக்காவின் பீட்டா அனலிட்டிக் நிறுவனத்தின் கார்பன் பரிசோதனை அறிக்கை நாளை (14) இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளது.
மனிதப் புதைகுழியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் ஊடாக 316 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
அத்துடன், புதைகுழியில் இருந்து அகற்றப்பட்ட 307 மனித எலும்புக்கூடுகள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 26 எலும்புக்கூடுகள் குழந்தைகளுடையதென அடையாளங்காணப்பட்டுள்ளது.
மன்னார் மனிதப் புதைகுழியில் இன்று 144 ஆவது நாளாக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மனித எச்சங்கள் புதைக்கப்பட்ட மிகச்சரியான காலப்பகுதியை அனுமானிக்க முடியாது எனவும், 10 வருட காலத்திற்குள் புதைக்கப்பட்டதா, இல்லையா என்பதை மாத்திரமே கார்பன் பரிசோதனை ஆய்வுக்கூடத்தினால் வழங்க முடியும் எனவும் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.