by Staff Writer 12-02-2019 | 10:33 PM
Colombo (News 1st) விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவு, கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பான விடயங்களை ஆராய்ந்து வருவதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறிவித்தனர்.
விளையாட்டுத்துறை அமைச்சராக மஹிந்தானந்த அளுத்கமகே செயற்பட்ட போது, கரம் மற்றும் தாம் போர்ட்களை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பத்தில் 5 கோடியே 31 இலட்சத்திற்கும் அதிக நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிப்பதற்கு பிரதம நீதியரசரின் கருத்தைக் கேட்டறியவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில் இன்று அறிவித்தது.
அதற்கமைய, இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முறைப்பாட்டாளர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபராக சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெர்னாண்டோ ஏற்கனவே பெயரிடப்பட்டிருந்தார்.