பொலிஸாரின் கவனயீனத்தால் தப்பியோடிய சந்தேகநபர்

பொலிஸாரின் கவனயீனத்தால் தப்பியோடிய சந்தேகநபர்: நாவாந்துறையில் ஆர்ப்பாட்டம்

by Staff Writer 01-02-2019 | 8:20 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் சிறுமி ஒருவரை கடத்த முற்பட்ட நபர் தப்பிச்சென்றமைக்கு பொலிஸாரின் கவனயீனமே காரணம் என தெரிவித்து இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நாவாந்துறையில் நேற்று முன்தினம் (30) 12 வயது சிறுமியை கடத்துவதற்கு காத்தான்குடியைச் சேர்ந்த நபர் ஒருவர் முயற்சித்துள்ளார். எனினும், பிரதேச மக்களின் முயற்சியால் கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபரை பிரதேச மக்கள் பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். மக்களின் தாக்குதலுக்கு இலக்கான குறித்த சந்தேகநபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று (31) தப்பிச்சென்றுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி தெரிவித்தார். கவனயீனமாக நடந்துகொண்ட பொலிஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாவாந்துறை பொது சந்தைக்கு முன்பாக பிரதேச மக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.