by Staff Writer 28-01-2019 | 7:20 PM
Colombo (News 1st) வெனிசூலாவில் அந்நாட்டு குடிமக்களுக்கு எதிரான உடல் மற்றும் வாய்வழியான தாக்குதல்கள் இடம்பெறுவதாக, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவரமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், வெனிசூலாவிலிருந்து வேறுநாடுகளுக்கு இடம்பெயரும் மக்கள் தொடர்பில் ஒற்றுமையை வெளிப்படுத்துமாறு இலத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வெனிசூலாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் கடந்த வௌ்ளிக்கிழமை அவதானித்ததாகத் தெரிவித்த UNHCR இருப்பினும், வெனிசூலா மக்களின் வௌியேற்றம் இதுவரை பாரியளவில் அதிகரிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
நாளொன்றுக்கு வெனிசூலா மக்கள் 5,000 பேர் தமது தாய்நாட்டை விட்டு வௌியேறுவதாகவும் இதுவரை நாட்டை விட்டு வௌியேறியவர்களின் எண்ணிக்கை 3 மில்லியனுக்கு அதிகம் எனவும் ஐ.நா.வின் அகதிகளுக்கான முகவரமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, வெனிசூலாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள மனிதகுல இடர்களினால் மேலும் ஆயிரக்கணக்கானோர் தகுந்த ஆவணங்களின்றி எல்லையைக் கடந்து அயல்நாடான கொலம்பியாவுக்குச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.