by Staff Writer 22-01-2019 | 10:35 PM
Colombo (News 1st) 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தில் இருந்து கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பொலிஸ் திணைக்களத்திற்குரிய சட்டம் மற்றும் ஒழுங்கு விடயப்பரப்பிற்கான அமைச்சுப் பதவியை ஜக்கிய தேசியக் கட்சியினரே வகித்து வந்தனர்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும் ஆட்சிப்பீடமேறிய பின்னரும் மோசடி, ஊழல் மற்றும் குற்றம் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தொடர்ந்தும் கூறி வந்தனர்.
பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவு போன்ற புதிய நிறுவனங்களையும் இதற்கமைய ஆரம்பித்தனர்.
எனினும், பாரியளவான ஊழல், மோசடி குறித்த குற்றங்கள் தொடர்பில் கடந்த நான்கு வருட காலப்பகுதிக்குள் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா என்ற சந்தேகம் நாட்டு மக்களிடையே நிலவுகின்றது.
மோசடி செய்யப்பட்ட பணம், வைப்பிலிடப்பட்ட வங்கிக் கணக்கு இலக்கம் ஆகியவற்றை அறிந்துள்ளதாக அமைச்சர்கள் கூறியிருந்தாலும், இறுதியில் குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்களுடன் இணைந்து அமைச்சர்கள் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.
பொலிஸார் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கை தற்போது வேகமாக இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது.
பாரியளவில் போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதுடன், குற்றத்தடுப்பிற்கும் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
பல வருடங்களாக முன்னெடுக்கப்படாதிருந்த, முறிகள் மோசடி தொடர்பான விசாரணை தற்போது முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.
2016 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இடம்பெற்ற முறிகள் கொடுக்கல் வாங்கலால் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு 8 பில்லியன் ரூபாவிற்கும் அதிக நட்டம் ஏற்பட்டமைக்கான தகவல் உள்ளதாக நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
காலப்போக்கில் மறைவதற்கான சாத்தியம் காணப்பட்ட பெரும்பாலான குற்றங்கள் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்து, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.