by Staff Writer 20-01-2019 | 1:22 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22), சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
சபாநாயகரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அந்த அறிக்கை சபாநாயகர் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கவுள்ளது.
குறித்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்டநடவடிக்கை குறித்தும் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவர் மீதும் குறித்த அறிக்கையில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 15,16 மற்றும் 17 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் விசாரணை செய்வதற்கு, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இதேவேளை, அரச கணக்காய்வுசபை, பொது முயற்சியாண்மைக்கான குழு உள்ளிட்ட பல பாராளுமன்ற செயற்பாட்டுக் குழுக்களின் தலைவர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களையோ, பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களையோ அரச கணக்காய்வுசபை, பொது முயற்சியாண்மைக்கான குழுவிற்கான தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்க வேண்டாம் என கோரி பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஸ, சபாநாயகருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த சபைகளுக்கான தலைவர்களை நியமிக்கும்போது, எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களை நியமிப்பது குறித்து பரிசீலிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர், தனது கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.