அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார் பிரிட்டன் இளவரசர்

விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார் பிரிட்டன் இளவரசர் ஃபிலிப்

by Bella Dalima 18-01-2019 | 5:00 PM
பிரிட்டன் இளவரசர் ஃபிலிப் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் இளவரசர் ஃபிலிப் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். பிரிட்டன் ராணி இரண்டாவது எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான ஃபிலிப்(97) பிரிட்டனின் சாண்டிரினாம் எஸ்டேட் பகுதியில் தமது பணியாளர்கள் 2 பேருடன் காரில் நேற்று (17) கிழக்கு பிரிட்டன் நோக்கி சென்றுகொண்டிருந்த போது, வளைவொன்றில் கார் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இருந்து இளவரசர் ஃபிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸாரும் மீட்புப்படையினரும் இளவரசரையும் காயமடைந்த மற்றவர்களையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இளவரசரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நலமாக உள்ளதாகவும், அவருக்கு சிறிய காயம் கூட ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை பக்கிங்காம் அரண்மனையும் தற்போது உறுதிபடுத்தியுள்ளது. இளவரசர் ஃபிலிப் விபத்தில் சிக்கிய செய்தி வேகமாக பரவத்தொடங்கியதும் பிரிட்டன் மக்கள் உட்பட அரச குடும்பத்தினர் அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்த பிரார்த்தனையின் பயனாகவே இளவரசர் ஃபிலிப் காயமின்றி உயிர் பிழைத்திருப்பதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.